ரஜினி பக்கம் சாய்கிறதா அ.தி.மு.க. வாக்கு வங்கி?

ரஜினியின் அரசியல்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

ரஜினி ரசிகர்களின் இருபது ஆண்டு காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. எம்ஜிஆரில் தொடங்கி விஜயகாந்த், கமல்ஹாசன், விஷால் வரைக்குமான அரசியலில் குதித்த நடிகர்கள் பட்டியலில் ரஜினியும் இணைந்துவிட்டார்.

2018 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு முதல்நாள் தன் ரசிகர் களுடனான ஆறு நாட்கள் சந்திப்பின் இறுதிநாளில் ரஜினி ‘தனிக்கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்' என்று அறிவித்து, ஒரு அரசியல் பூகம்பத்தை உருவாக்கினார்.

பல்வேறு கட்சிகளிலும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்தால் பலமான சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ரஜினி ரசிகர் மன்றங்கள் 1995- 96 -ல் இருந்தன. அதற்குப் பிறகு மன்றங்கள் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுவிட்டது. பதிவு செய்யப்படாதவை இன்னும் ஒரு மடங்கு இருக்கலாம்.  இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் பகுதிகளில் இருக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறனர். படிவங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ரஜினி எடுத்திருக்கும் இந்த அரசியல் நுழைவு முடிவைப்பற்றி பல்வேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. ‘‘என் 45 வயதில் தமிழ்நாட்டின் முதல்வர் பதவியையே வேண்டாம்  என்று சொன்னவன், இந்த 68 வயதிலா பதவிக்கு ஆசைப்படப் போகிறேன்,'' என்று பலத்த ஆரவாரத்துக்கு இடையே கூறினார் ரஜினி.

சிஸ்டம் சரியில்லை சரி செய்யப்போகிறேன் என்று புறப்பட்டிருக்கும் ரஜினி இருபது ஆண்டுகளாக காத்திருந்தது ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்ததால் ரஜினி அமைதியாக இருந்தாரா? இப்போது உருவாகியிருக்கும் வெற்றிடத்துக் காக காத்திருந்தாரா? இந்தத் தலைவர்களை எதிர்க்கும் துணிச்சல் அவருக்கு இல்லையா?

1991- 96 ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அவரை மேடையில் வைத்துக்கொண்டே ரஜினிகாந்த் சீறியது அவரது துணிச்சலுக்கு உதாரணமாக சுட்டிக்காண்பிக்கப்படுகிறது. சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் விழாவில் எல்லோரும் பேசி முடித்தபின் நன்றியுரை ஆற்ற வந்த ரஜினி, திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி விரலைச் சொடுக்கிக் கொண்டு, ‘‘நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்...'' எனச் சொல்லி ஆவேசமானார்.  ‘‘நீங்க திறந்து வெச்சீங்களே... ஃபிலிம் சிட்டி... அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்'' எனச் சொன்னதுமே... முடிவுக்கு வர வேண்டிய விழாவில் பரபரப்பு எகிறியது.  

‘‘அப்போ பண்ண தப்பை இப்போ சரிபண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துக்கிட்டு சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை; அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு'' என ரஜினி பேசிக் கொண்டே போனார். எதுவும் பேசாமல் அமைதியாக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். 

இதற்கு அடுத்ததாக மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்த பின் நடந்த பாட்ஷா பட வெள்ளிவிழா. இந்த விழாவில்  ‘‘சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதலமைச்சருக்கு (ஜெயலலிதா) இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள்.தமிழகத்தில் இனி வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால், அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாகச் சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவனாகச் சொல்கிறேன்.'' என்று பேசினார். விளைவு மேடையில் அவருடன் அமர்ந்திருந்த உணவு அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் பதவி சிலநாட்களில் பறிபோய்விட்டது!

இதைத்தொடர்ந்து வந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான் ரஜினி, ‘‘இந்தத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!'' என்றார். ஜெ படுதோல்வி அடைய அவரும் ஒரு காரணமாக அமைந்தார். இதை விட்டால் ரஜினியின் நேரடி அரசியல் ஈடுபாடு என்பது 98 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததில் எடுபடாமல் போனது! அதுமட்டும் அல்லாமல் 2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாமகவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாமகவை அந்த தேர்தலில் தோற்கடிக்க ரஜினி ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். ஆனாலும் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் பாமக வென்றது. அத்துடன் ரஜினி அமைதியாகிவிட்டார் என்பதை விட அடங்கிப் போய்விட்டார் எனலாம்!

 ‘‘ஜெயலலிதாவை எதிர்த்திருந்தாலும்கூட  மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த விழா ஒன்றில் ஜெயலலிதா முன்னிலையில் அவரை ‘தைரிய லட்சுமி' என்று விண்ணளாவப் புகழ்ந்தது ஒரு முரண்பாடு! கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏன் மோடிக்குமே கூட நண்பராகவே இருந்து வந்த ரஜினி, இன்று அரசியல் வருகைக்கு முதல் காலடி எடுத்துவைத்திருக்கிறார். இன்று திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசிர்வாதம் வாங்கி அரசியலுக்கு வரும் அவர் திமுகவை எப்படி விமர்சிக்கமுடியும்?'' என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.

‘தடிக்கும் வலிக்காமல் பாம்புக்கும் வலிக்காமல்' என்றொரு பழமொழி உண்டு. தமிழ்ச் சமூகத்தின் அன்றாடப் பிரச்னைகள் பற்றி எதிர்வினையாற்றாமல் அரசியல்வாதியாக பரிணமிக்க முடியாது. ஏதோ சடங்குக்காக நடிகர்கள் நடத்தும் கண்டனக்கூட்டங்களில் ரஜினி கலந்துகொண்டு ஆவேச உரை நிகழ்த்தியிருக்கிறார்தான்! ஆனால் அவர் தீவிரமாக கருத்துச் சொல்லிவிட்டு மீண்டும் பின்வாங்கியதே இதுவரை நிகழ்ந்திருக்கிறது. தன் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடவேண்டுமே என்று நினைப்பவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாது! ஏனெனில் அவர் சொல்லும் கருத்துகளும் மேற்கொள்ளும் செயல்பாடுகளும் வணிக லாபங்களை நிச்சயமாகப் பாதிக்கவே செய்யும். ரஜினி சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதியாக ஆகவிருக்கிறாரா என்பதில் தான் அவர் சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று சொன்னதில் எந்த அளவுக்கு முழுமையான ஈடுபாடுகாட்டுகிறார் என்பது விளங்கும்.

கர்நாடகாவைச் சேர்ந்த மராட்டியர் என்கிற அடையாளம் அரசியலுக்கு வந்தபின் அவரை தொடர்ந்து துரத்தப்போகும் இருண்ட நிழலாக இருக்கும். இதைச் சமாளிக்கும் வியூகங்களும் அவரிடம் இருக்கவேண்டும்.

இப்போதைக்கு தமிழ்நாடு முழுக்க பரவிக்கிடக்கும் அவரது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியை மன்றத்தின் மாநில நிர்வாகிகள் சார்பாக ஒருங்கிணைப்பு செய்யப்படுகிறது. ஆனால் பரவலான வெற்றியைப் பெற சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், களச்செயல்பாட்டாளர்கள், அரசியல் அனுபவ சாலிகள் கொண்ட பெரிய குழு அவருக்குத் தேவை. ஆனால் அவர் இதுவரை திரைப்படத் துறை சார்ந்த நபர்களையே தன்னுடன் நிறுத்திக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு விமரிசனமாகப் பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் அறிவித்த சந்திப்பில் கூட திரைப்படம் சார்ந்த பிரமுகர்களையே அவர் உடன் வைத்திருந்தார்!

கொள்கை என்னான்னு கேட்டாங்க... தலை சுத்திடுச்சு என்று அவர் கூறியது மிக இயல்பான ஒரு கருத்தாக இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் அரசியலை, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை கையிலெடுக்க நினைப்பவர் முதலில் ஒவ்வொரு துறைகளிலும் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டத்தை வகுக்கவேண்டும். அதை முன்வைக்கவேண்டும். அதைச் செய்யாமல் காலூன்றினால் தன் பிம்பத்தை மட்டும் முன்வைக்கும் அரசியலை ரஜினி செய்யவிரும்புகிறார் என்று பொருள். அது நீண்ட நாள் நீடிக்காது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. மூன்றே ஆண்டுகளில் மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்று சொல்லி யிருக்கிறார் அவர். ஒரு தொழில் நிறுவனத்தை முன்னுக்குக் கொண்டுவருவதே மூன்றாண்டுகளில் நடக்காத காரியம். ஒருவேளை தன் ரசிகர்களை உற்சாகப்படுத்த அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம். நிஜத்தில் அதற்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை அவர் உணர்ந்தே இருப்பார். ஆனால் எல்லோரும் எதிர்பார்ப்பது ரஜினி, நிஜமாகவே இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கிறார் என்றால் அவர் தங்கள் முன் கொள்கை வடிவில், தான் ஒவ்வொரு துறை சார்ந்து என்ன செய்யவிருக்கிறேன் என்கிற திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே. தன் ஒரு துளி வியர்வைக்கு ஒரு லட்சம் தங்கக்காசு தந்த தமிழகத்துக்கு எதாவது திருப்பிச் செய்ய இருக்கிறார் என்பதை இதுவே உணர்த்தும்! மாற்றங்களை ஒரு கட்சி நிகழ்த்துவது என்பது  ஒரு தனிமனிதரின் காலத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் நிகழவேண்டிய தொடர் செயல்பாடு ஆகும்.

ரஜினி என்ற மனிதரின் செயல்பாடுகளில் நிகழ்ந்திருக்கும் சறுக்கல்களாக மேற்சொன்ன வற்றைப் பார்க்கலாம். ஆனால் அவரது வருகையால் பிற கட்சிகள் விழித்துக்கொண்டுள்ளன என்பது உண்மை. இந்தியா டுடே நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு அவர் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் நிற்கும் பட்சத்தில் 33 இடங்களில் வெற்றி பெறுவார் என்கிறது. நிஜமாகவே எந்த கட்சியின் வாக்குவங்கி ரஜினியின் பக்கம் சேரும்?

‘‘ திமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா என்கிற வசீகரத் தலைமை இல்லை. அதனால் அதன் தொண்டர்கள் ஒரு வெற்றிடத்தை உணர்கிறார்கள். அவர்கள் ரஜினி பக்கம் சாய்வதற்கு தர்க்கரீதியான காரணங்கள் இருக்கின்றன. டிடிவி தினகரனின் தந்திரங்கள் ஆர்கே நகரில் பலிக்கலாம். ஆனால் தமிழகம் முழுக்க பலிக்காது. எனவே மு.க. ஸ்டாலினா ரஜினிகாந்தா என்றொரு நிலைகூட அடுத்த தேர்தலில் உருவானால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,'' என்று அதிர்ச்சியூட்டுகிறார் ஓர் அரசியல் கணிப்பாளர். இந்தியா டுடே கணிப்பின்படியே அதிமுகவுக்கு 2016&ல் வாக்களித்தவர்களில் 60 சதவீதம் பேர் ரஜினி பக்கம் சாய்கிறார்கள். ரஜினியின் அரசியல் வருகையை அடுத்து அதிமுக தலைவர்களின் பதற்றமான எதிர்வினையும் இதற்கு வலுசேர்க்கிறது. இப்போதே தமிழகத்தின் பெரியகட்சியில் இருக்கும் சில தலைகள் ரஜினியின் தரப்பில் சமிக்ஞைக்காக காத்திருப்பதாகவும் ஒரு சில  தகவல்கள் பரப்பப்படுகின்றன. ரஜினி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாகச் சொன்னாலும்கூட தேர்தல் சமயத்தில் வேறு சில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு பலம்வாய்ந்த அணியை அமைப்பார் என்றே  எதிர்பார்க்கப்படுகிறது.

‘‘ஜெ. இருந்தவரையில் அக்கட்சியை மென்இந்துத்துவக் கட்சியாகவே பாஜகவினர் பார்த்தனர். இப்போது ரஜினி அந்த இடத்தை நிரப்புவார் என அவர்கள் எதிர்பார்ப்பதால் கூட்டிக்கழித்துப் பாருங்கள் சரியாக வரும்,'' என்கிறார் அந்த அரசியல் விமர்சகர். எப்படி இருந்தாலும் ஒரு நீண்ட பயணத்துக்கு ரஜினி தன்னை தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com